Put some informations about your eshop here (address, contacts etc.)

மறுக்க முடியாத உண்மைகள்: 4

26- ஏன் விலை போகிறார்கள்?
பெரும் பெரும் வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும், அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் விலைக்கு வாங்கி விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதே என்று யாரும் கேட்டால், அவர்கள் ஏன் அப்படி விலை போகிறார்கள்? என்பதே நமது கேள்வியாகும். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி தனக்கு தேர்தல் நிதி இரண்டரைக் கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இன்னொரு கட்சி ஒன்றரை கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இப்படி தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் தேவைதானா? ஒரு வேட்பாளருக்கு விளம்பர வகைகளுக்காகவும், தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் அவை முறைப்படி இருக்குமானால், எவ்வளவு செலவாகி விடப்போகிறது! புள்ளி விவரம் தெரியாமல்தான் இன்றைய அரசியல்வரிகள் இருக்கின்றனரா? கோடிக்கணக்கில் உற்பத்தியாளர்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் தங்களை விற்றுப் பெறவேண்டிய அவசியமென்ன வந்து விட்டது? கோடிக்கணக்கில் கொடுப்பவர்கள் அவர்களின் துணை கொண்டு பல கோடி திரட்டிட முடியும் என்ற தைரியமில்லாமலா கொடுக்கின்றனர். நாளை இவர்கள் ஆட்சியல் அமரும்போது கோடி கோடியாக கொடுத்தவர்களுக்கு அடிபணியாமல் இருக்க முடியுமா? அதன் விளைவு என்னவாகும், அப்படிப்பட்ட ஆட்சிகளைக் கொண்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு நலன் ஏற்படும் என்று நாஸ்திகர்கள் நம்புகின்றார்களா? இப்படிப்பட்ட அரசியலில் இவர்களும் பங்கெடுக்கின்றார்களே, அப்படியானால் அதன் இரகசியம் என்ன? நாட்டு மக்களின் நலனிலும், ஒற்றுமையிலும், சமுதாய மேம்பாட்டிலும் உண்மையில் அக்கறை உடையவர்கள் இப்படிப்பட்ட அரசியலமைப்பைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? இதற்கு நாஸ்திகர்களின் பதில் தான் என்ன?
உணவு விடுதிகளில் சாப்பிடும் உணவு வகைகளுக்கும் வரி விதிக்கும் கீழ் நிலைக்கு இன்றைய அரசு ஆளாகியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமது நாட்டில் பிரபலமாக பேசப்பட்ட பீரங்கி ஊழல்-இந்திய பாதுகாப்புத் துறைக்கே கேடுதரும், அவமானத்தைத் தரும் நிகழ்ச்சி. அரசியல்வாதிகளின் முறைகேடான செயல்களால் அரசியலுக்கே இழுக்காக அமைந்துள்ளது. இன்று பரபரப்பூட்டும் பல கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையென கூறப்படுகிறது, இதுவும் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள ஓர் அவப்பெயர். மேலும் சாராயத் தொழிலிலும், சூதாட்டத் தொழிலிலும் அரசியல்வாதிகளின் அணி வகுப்பே மேலோங்கி நிற்கிறது. சுருங்கச் சொன்னால், இன்று நம் நாட்டில் நீக்கமற நிறைந்துள்ளது ஊழல்தான். அந்த ஊழல்களுக்கு முழு முதற்காரணமாக, களமாக இருப்பவர்கள் இன்றைய அரசியல்வாதிகளே!.

இன்றைய அரசியலை நாஸ்திகர்கள் சரி என்று ஒப்புக்கொண்டு அவர்களும் இன்றைய அரசியலில் எப்படி பங்கு வகிக்கிறார்கள், இவ்வாறு நாம் கேட்பதின் காரணம், இறைவனின் பெயரால் மதப்புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதற்காக ''கடவுள் இல்லை! இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை ஆக்கியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!'' என்று கோஷமிடும் நாஸ்திகர்கள் இங்கு அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் என்ற புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருவதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாஸ்திகர்கள் ''அரசியல் இல்லை! இல்லவே இல்லை! அரசியலைக் கற்பிப்பவன் முட்டாள்! அரசியலை ஆக்கியவன் அயோக்கியன்! அரசியலை ஒப்புக் கொள்கிறவன் காட்டுமிராண்டி!'' என கோஷமிடுவதில்லையே! ஏன்? மாறாக, இப்படிப்பட்ட முடை நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடையில் இவர்களும் முங்கிக் குளிப்பதேன்? இதுவே நமது கேள்வியாகும். நாஸ்திக நண்பர்கள் விடையளிப்பார்களா?

நாஸ்திகர்கள் சிந்தித்து விளங்கத்தவறிய அந்தப் பேருண்மையை நாம் தெளிவுபடுத்துகிறோம். மனிதன் தேவையுடையவனே, தேவையற்ற ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடியாது. தேவை எந்தளவு முக்கியமானதாக அமைகிறதோ, அந்த அளவிற்கு நெருக்கடியும் ஏற்படும் எனவே, இடைத்தரகர்கள் ஏற்படுவதும் இயல்பே. இப்படிப்பட்ட இடைத்தரகர்களின் மனிதாபிமானமற்ற மிருகச் செயல்களைக் கண்டித்து, அவர்களைத் திருத்தப் பாடுபட வேண்டுமேயல்லாமல். அவர்கள் திருந்தாவிட்டால் அவர்களை அகற்றிட பாடுபட வேண்டுமேயல்லாது அத்தரகர்கள் உண்டாகக் காரணமாயிருந்த தேவைகளை மறுப்பது மனிதச் செயலல்ல. மனிதன் மனிதனாக வாழ இறைநம்பிக்கை மிகமிகத் தேவையானதாகும். இறைநம்பிக்கை உறுதியாகவும், தெளிவாகவும் உள்ள எந்த மனிதனும் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவான் என்று நாம் நம்பவே முடியாது. போலி ஆஸ்திகர்களைப் பார்த்து இந்த நாஸ்திகர்கள் ஒரு பெரிய தப்பான முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். மக்களிடையே சரியான, முறையான, தெளிவான, உண்மையான ஓரிறை நம்பிக்கையை உண்டாக்குவதன் மூலம், இன்று மக்களிடையே மலிந்து காணப்படும் பல ஊழல்களையும், தவறுகளையும், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் கொடுஞ்செயல்களையும் அகற்றி நேர்மையான, உன்னதமான சகோதரத்துவம் நிலவும் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அந்தப் பேரூண்மையாகும்!.

இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப்பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விபரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியவசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே இடைத்தரகர்கள் புகுந்து, தங்கள் சுய ஆதாயத்திற்காக பெருங்கூட்டத்தை ஏமாற்ற முற்படுவர். இதைக் காரணங்காட்டி அந்த அத்தியாவசியக் காரியங்கள் இல்லை என்றோ, அல்லது தேவையில்லை என்றோ சொல்வது அறிவாளிகளி;ன் கூற்றல்ல. குடியை ஒழிக்கத் தென்னை மரங்களையும், பனை மரங்களையும் வெட்டிச் சாய்க்கும் அறிவீனர்களின் கூற்றேயாகும் என்பதையும் தெளிவாகப் பார்த்தோம்.

27- கடவுளுக்கு அடுத்து அரசியல்:
''கடவுளுக்கு அடுத்தப்படியாக அரசியல்;, அனைவரையும் ஆட்கொள்ளத்தான் செய்யும்!'' இது திரு சி.என். அண்ணாத்துரையின் கூற்றாகும். திரு. சி.என். அண்ணாத்துரை நாஸ்திகத்தைத் தமிழ்நாட்டில் பரப்பிய திரு. ஈ.வெ. ராவின் பிரதம சிஷ்யர் என்பது நாடறிந்த உண்மை.

அரசியலை ஆதரிப்பவர்கள், இறை நம்பிக்கையை எதிர்ப்பது விவேகமான செயல் அல்ல என்பதையே இக்கூற்று ஊர்ஜிதம் செய்கிறது. அரசியலிலுள்ள ஊழல்களை அகற்றி, தூய்மையான அரசியலை மக்களுக்குக் கொடுக்க அறிவாளிகள் கடமைப்பட்டுள்ளனர். இதேபோல் இறை நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள ஊழல்களை அகற்றி, தூய்மையான இறை நம்பிக்கையை மக்களுக்கு போதிப்பது அறிவாளிகளின் கட்டாயக் கடமையாகும்.

அடுத்து, ''இறைவனே இல்லை'' என்று கூக்குரலிடுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சமத்துவ, சகோதரத்துவ, சுபிட்ச வாழ்க்கையை மக்களுக்கு இந்த நாஸ்திகர்கள் கொடுத்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் நாம் பெற முடியும்.

28- கம்யூனிஸத்தின் அழிவு:
ரஷ்ய நாட்டில் 1917-ல் நாஸ்திகர்களின் அரசாங்கம் நிலை நாட்டப்பட்டது. கடவுள் நம்பிக்கையை மக்களிடமிருந்து அகற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்காக பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பல கோடிக்கணக்காண மக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஸ்டாலின் தனது பொதுவுடமைக் கொள்கைகளை நிலைநாட்ட இரண்டு கோடி மக்களை கொன்றிருப்பார் என்று மதிப்பிடப்பட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களைப் பலி கொடுத்த பின்பாவது, நாஸ்திகத்தால் மக்களுக்குச் சுபிட்சமான ஒரு வாழ்க்கையைத் தர முடிந்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். இதற்கு உடைந்து சிதறிய ரஷ்யாவே உலகத்துக்குப் போதுமான சாட்சியாக உள்ளது.

இன்று அகில உலகிலும் நீக்கமற நிறைந்து காணப்படும் வன்செயல்களுக்கு வன்முறையின்றி எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை என்ற நாஸ்திகவாதிகளின் தவறான தத்துவமே முழு முதல் காரணமாகும். நாஸ்திகத்தை நிலைநாட்ட முற்பட்ட ரஷ்யா, தனது செயல்களை இரும்புத் திரைக்குப் பின்னால் மூடி மறைத்துக்கொண்டது ஏன்? என்று சிந்திப்பவர்களுக்கு நாஸ்திகவாதத்தின் இயலாமை புலப்படும்.

கோர்பசேவ், ரஷ்ய அதிபரான பின் நாஸ்திகவாதம் தவறான சித்தாந்தம் என்பதைச் சிறிது சிறிதாக உணர்ந்து வந்தார், பகிரங்கமான கூறவும் முற்பட்டார். பொதுவுடைமைக் கொள்கையால் ஆளப்பட்ட ரஷ்யாவில் கடந்த 75 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள சீரழிவுகள், ஒழுக்கக்கேடுகள், மனித அமைதிக்கும், சுபிட்சத்திற்கும் ஏற்பட்டுள்ள பங்கங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யர்கள் நாஸ்திக வாதம் தவறென்ற முடிவுக்கு வந்து, தங்கள் விடிவுக்கு வேறு வழிகள் உண்டா? என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று ரஷ்யா சிதறி பல குட்டி நாடுகளாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
ரஷ்யா நாட்டில்தான் நாஸ்திக வாதம் தோல்வியுற்றது என்றில்லை. அதற்கடுத்து சீனாவில் நிலைநாட்டப்பட்ட நாஸ்திக வாதமும் தோல்வி கண்டு வருகின்றது. சீனாவின் ஆட்சியாளர்களும் தங்கள் நாஸ்திகவாதக் கொள்கைகளிலுள்ள குறைகளை உணர்ந்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முற்பட்டிருக்கிறார்கள்.

29- தமிழகத்தில் நாஸ்திகம்:
தமிழகத்தில் நாஸ்திகத்தைப் பரப்ப பெரும் முயற்சி செய்யப்பட்டது. தமிழகத்தின் துயர் துடைக்கப் பட்டுள்ளதா? தமிழக மக்கள் அனைவரும் அனைத்தும் பெற்று, சுபிட்சமான, சந்தோஷ, சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்று எண்ணிப்பாருங்கள்.

சாராய சாம்ராஜ்ய அதிபதிகளும், விபச்சார விற்பன்னர்களுமே வளர்ந்துள்ளனர். மது, மாது, சூது இவற்றால் ஒரு சிலர் குபேர வாழ்க்கை வாழ்வதற்கு வழியேற்பட்டுள்ளது. பெருந்தொகையினர் நாள் முழுவதும் உழைத்தும், கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழி இல்லாமலும், உழைத்துப் பெற்ற அற்ப காசையும் குடியில் அழித்தொழித்து அல்லல்படுவதையுமே கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாஸ்திக வாதம் இப்படிப்பட்ட மக்களை திருத்த முடியவில்லை. ஒழுக்கம் நிறைந்த மக்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. தமிழக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருக்கும் தமிழக சட்டசபையில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் தமிழகத்தைத் தலை குனிய வைத்துள்ளன.

ஆக, உலகின் மூன்றில் ஒரு பங்கினரை ஆட்கொண்ட நாஸ்திக வாதம் தனது இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கிவிட்டது. நாஸ்திகத்தால் ஆட்கொள்ளப்பட்ட பலர் தங்கள் தவறை உணர்ந்து திருந்த முன் வந்திருக்கின்றனர். இது நாஸ்திக நண்பர்கள் மறுக்க முடியாத உண்மையாகும்.

சத்தியத்திற்கு மாற்றமான கொள்கைகள் இவ்வுலகில் என்றுமே வேரூன்றியதில்லை. அவற்றின் ஆரம்ப காலத்தில் அவை பெரும் முற்போக்குத் திட்டங்கள் போலும், மக்களின் சர்வ பிரச்சனைகளையும் தீர்க்கும் சர்வலோக நிவாரணிகள் போலும் தோற்றமளித்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல் வடிவில் பார்க்கும்போது அவற்றின் போலித்தனம் தெளிவாக தெரிந்தே தீரும். அந்த அடிப்படையில் ''நாஸ்திக வாதமும்'' நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு, அதன் இயலாமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இதன் பிறகாவது நாஸ்திகவாத்தில் நம்பிக்கை உடையவர்கள் சிந்திப்பார்களா? முனிதன் என்றால் அவனுக்கு சுய அறிவு இருக்க வேண்டும். சுய அறிவு இல்லை என்றால் கேள்வி அறிவாவது இருக்க வேண்டும். சுய அறிவும் இல்லை, கேள்வி அறிவும் இல்லை, அனுபவ அறிவாவது இருக்க வேண்டும். இது இறுதிநிலை, சுய அறிவும் இல்லை, கேள்வி அறிவும் இல்லை, அனுபவ அறிவும் இல்லை என்றால் அவனை மனிதனாக உலகம் மதிக்காது.

30- முஸ்லிம்களின் குறையேயன்றி இஸ்லாத்தில் குறை இல்லை
இவ்வுலகில் நாஸ்திகக் கொள்ளையை நிலைநாட்டிட பல ஆண்டுகளாக முயற்சிகள் செய்தும் அதன் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதைப் பெரிதாகப் பேசும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரால் 1400 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்தும் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லையே. அதனை ஏன் உணரத் தவறி விட்டீர்கள், எனக் கேட்கலாம். அதற்கான விடையாவது, சுமார் 23 வருட முயற்சியிலேயே இறைவனின் இறுதித்தூதர் இவ்வுலகில் குறிப்பிட்ட இலக்கை எட்டி, செயல் முறையிலே காட்டி விட்டார்கள். முஹம்து (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளிலேயே தனது முயற்சிகளின் பலனை கண்ணால் கண்டவர்கள், முடி சூடா மன்னராகத் திகழ்ந்தவர்கள் என்பதை சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்.

இந்த முஸ்லிம் சமுதாயம் என்று இறை கொடுத்த நேர்வழி விட்டு, மனித அபிப்பிராயங்களை மார்க்கதில் நுழைத்து, இஸ்லாத்தின் உண்மை நிலையைச் சிதைத்து மனிதர்களால் கற்பிக்கப்பட்ட மற்ற மதங்களைப் போல் இஸ்லாத்தையும் ஒரு மதமாக்கியதோ அன்றே இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்டது. இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோர் மனித அபிப்பிராயங்களையே இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்திக் கொண்டிருகின்றனர். மனித அபிப்பிராயங்கள் நீக்கப்பட்டு, இறை கொடுத்த நேர்வழி மட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டால், முஸ்லிம்கள் ஒரு தன்னிகரில்லா உயர் சமுதாயமாக உயர்ந்து, மற்ற சமுதாயங்களுக்கு வழிகாட்ட முடியும் என்றே நாங்கள் சொல்கிறோம்.

31- இவ்வுலகிலாவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா?
இவ்வளவு தெளிவாக நாஸ்திகத்தின் தீமைகளை விளக்கிய பின்பும் அவற்றில் நம்பிக்கையுள்ள நாஸ்திக நண்பர்களுக்காக, மறுமையைப் பற்றிய சிந்தனையை விட்டு, இவ்வுலக சிந்தனையை மட்டும் கருத்தில் கொண்டு, அந்த இவ்வுலக சுபீட்ச வாழ்க்கைக்காவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? அல்லது ஆஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? என்று தெளிவாக அடுத்துப் பார்ப்போம்.

கல்லையும், மண்ணையும், மிருகங்களையும், பறவைகளையும் இன்னும் கண்ட கண்ட பொருட்களையெல்லாம் கடவுள்களாக மூடத்தனமாக நம்பிச் செயல்படும் மக்களைத் திருத்தும் நல்ல நோக்கோடு, இறைவன் இல்லை என்ற தவறான தத்துவத்தை நில நாட்டுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சுபிட்சமான ஒரு வாழ்க்கை முறையை மனித சமுதாயத்திற்கு அளிக்கும் திட்டத்தில் நாஸ்திகர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பதற்குரிய ஆதாரங்களை விபரமாகப் பார்த்தோம்.

ஆக இதுவரை இறைவன் இல்லை என்று இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களின் போக்கு மிகவும் தவறானது, ஆபத்தானது, விவேகமற்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் விரிவாகப் பார்த்தோம். நடுநிலையோடு நமது ஆய்வை அணுகுகிறவர்கள் இறைவன் இல்லை என்ற தவறான கொள்கையை மாற்றிக் கொள்வர்கள் - இறை நம்பிக்கiயாளர்களாக - ஆஸ்திகர்களாக மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இவ்வளவு தெளிவான விளக்கங்களுக்குப் பிறகும் நாஸ்திகக் கொள்கையில் நம்பிக்கையுடன் இருக்கும் நண்பர்களுக்கு இறுதியாக சில விளக்கங்களை எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்.

32- நிச்சயம் இரண்டில் ஒன்று:
பிறந்த மனிதன் இறக்கிறான், மரணத்தைத் தவிர்க்கும் ஒரு வாழ்க்கையை மனிதன் வாழவில்லை என்பதில் நாஸ்திக நண்பர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நிச்சயமாக நாம் அனைவரும் மரணத்தை எதிர்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு மரணமடையப் போகிறோம். எனவே இப்போது மரணத்தின் பின்னுள்ள நிலையைப்பற்றி நம் இரு சாராரும் மறுக்க முடியாத உண்மை நிலை இரண்டில் ஒன்றுதான். அதாவது நாஸ்திக நண்பர்கள் கூறுவது போல், இறைவனும் இல்லை, மரணத்தின் பின் விசாரணiயும் இல்லை, சொர்க்க நரகமும் இல்லை, மரணத்தோடு மனிதன் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறான், மறு உலக வாழ்க்கை என்ற ஒன்று இல்லை என்பது உண்மையானால் நாஸ்திகர்களும் தப்பித்துக் கொள்வார்கள், நாமும் தப்பித்துக்கொள்வோம். மறுமையில் நஷ்டம் இரு சாராருக்கும் இல்லை என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கூற்று பொய்யாகி, நமது கூற்று உண்மையானால் அவற்றை மறுத்துக் கொண்டிருந்த நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டு துன்பப்படபோகிறார்கள். காரணம், அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மறுமைக்குரிய எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. ஆனால், நாம் மறுமையை நம்பி அதற்குரிய முன்னேற்பாடுடன் செல்வதால் இறை அளிக்கும் தண்டனைகளிலிருந்து தப்பித்து சுவர்க்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆக, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நாம் பாதுகாப்பின் பக்கமே (ளுயகந ளுனைந) இருக்கிறோம். நாஸ்திகர்களோ கடுமையான ஆபத்தின் பக்கம் (றுசழபெ ளுனைந) இருக்கிறார்கள். இப்போது நாஸ்திகர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம், மறுமை என்ற ஒன்று இருப்பதாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் வீணாக்கிக் கொள்கிறீர்களே, அது உங்களுக்கு நஷ்டம் தானே? என்ற கேள்வியே அது. இதிலும் அவர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்றே நாம் சொல்லுவோம்.

உலக ஆசாபாசங்களை விட்டு விலகியவர்களே வெற்றி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. சிற்றின்ப வாழ்க்கையைத் துறந்தவர்களே சித்தி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இறை மறை இவ்வாறு கூற வில்லை, இவை அனைத்தும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களின் கூற்றுக்களாகும். மாறாக, உலக வாழ்க்கையில் ஆசாபாசங்களுக்கிடையே அனைத்து இன்பங்களையும் முறையாக அனுபவித்துக் கொண்டே முழுமையான வெற்றி பெறும் ஒரு வாழ்க்கைத் திட்டத்தையே இஸ்லாம் மனித வர்க்கத்திற்கு கொடுத்துள்ளது. இறை கொடுத்த வழியில் நடப்பவர்கள் அணு அளவும் தங்கள் இம்மை வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். இவ்வுலக வாழ்க்கையில் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வழி முறைகளையே இறைவன் வாழ்க்கை நெறிகளாக மனிதனுக்கு அளித்துள்ளான். நாஸ்திகர்களை விட இறை கொடுத்த மறைவழி நடப்பவர்களே இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை நிறைவாக அடைந்து, மன திருப்தியுடன் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று உறுதிபட நம்மால் சொல்ல முடியும். இதனை பின்னால் நாம் விரிவாக விளக்குவோம்.

33- மதத்தால் விளைந்த விளைவு:
நாஸ்திகர்களின் இத்தவறான கூற்று மனித அபிப்பிராயங்களை கொண்டு மார்க்கத்தை மதமாக்கி, குருட்டு நம்பிக்கையில் இறைவன் பெயரைச் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அப்படிப்பட்ட மதவாதிகளின் வாழ்க்கை நிலைகளைப் பார்த்துச் சொல்வதாகும். இறை கொடுத்த மறைவழி கண்டு சொல்லுவதில்லை.
ஆதி மனிதன் ஆதாம் முதல் இன்று வரை இந்த மனித சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்தது மனிதனுக்கு சாந்தியை அளிக்கும் சாந்தி மார்க்கம்-இஸ்லாம் ஆகும். காலத்திற்கு காலம் இறை கொடுத்த வழி மறந்து, மனிதன் தனது மனோ இச்சையினால் அமைத்துக் கொண்ட வழி முறைகளே மதங்களாகும். மதங்களிலும் பல நல்ல போதனைகள் இருக்கின்றனவே என்ற மனமருட்சி அவசியமற்றதாகும். சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் கள்ள நோட்டுக்களிலும் செல்லா நோட்டுக்களிலும் நல்ல நோட்டுக்களிலுள்ள பல அம்சங்கள் இருக்கலாம். அதனால் அவை நல்ல நோட்டுகளாக ஆகிவிடுவதில்லை எனவே சத்திய மார்க்கம் மனிதக்கரம்பட்டு மதமாகி விட்டால் அது தனது பரிசுத்த நிலையை இழந்து விடுகிறது. இறை கொடுத்த தூய வாழ்க்கை நெறி பிறழ்ந்து வழி தவறிச் செல்லும் நிலை அங்கு உருவாகி விடுகிறது.

34- மனிதன் மாறுட்ட கருத்துடையவனே!:
மனிதன் மாறுபட்ட கருத்துகளை உடையவன் என்பதில் ஐயமில்லை. எனவே பற்பல கருத்துக்கில் பற்பல மதங்கள் தோன்றின. ஆயினும் மனிதன் தனது கற்பனையினால் தோன்றிய மதங்களுக்கும் இறைச் சாயம் பூசி இருப்பதால் நாஸ்திகர்கள் இந்த மதங்களை எல்லாம் தூய வாழ்க்கை நெறி கொடுத்த இறைவனுடன் சம்பந்தப்படுத்தி ஏமாறுகின்றனர். மனித சமுதாயத்தில் வேற்றுமைகளை உண்டுபண்ணும் மதங்களை கொடுத்த ஒரு இறைவன் இருக்க முடியுமா?, என்று வினா எழுப்புகின்றனர். ''கைசேதம், இறை கொடுத்த இறுதி மறையாக ஒரு புள்ளியும் பழுது படாத நிலையிலுள்ள குர்ஆனை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களாவது தங்கள் வாழ்க்கை முறைகளில் மனித அபிப்பிராயங்களைக் கலக்காமல் தூய இஸ்லாமிய நெறிமுறையில் வாழ்கின்றார்களா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் பெற முடியும்.'' வெகு சொற்பமான முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் வாழ்ந்தாலும் இது நாஸ்திகர்களின் கண்ணில் படுவதில்லையே.

முஸ்லிம்கள் என்ற பெயரோடு உலகலாவிய அளவில் இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயத்தைத்தானே முஸ்லிம்களாக அவர்கள் பார்க்க முடியும். முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளும் இறை கொடுத்த இறுதி மறைக்கும், இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயம் கொடுக்கும் விளக்கத்தைத்தானே அவர்கள் சரி என்று ஏற்க முடியும். இது மனித இயல்புதானே, இதை மறுக்க முடியுமா? குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக மறுக்கின்ற எத்தனையோ கணக்கற்ற சடங்குகளை இந்த முஸ்லிம் சமுதாயத்தினர் செய்து கொண்டிருக்கினறனர். மரணமே இல்லாத, என்றும் நித்தியனான இறைவனை விட்டு விட்டு இவர்களைப்போல் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்து மரணித்தபின் அவர்களுக்காக சமாதிகளைக் கட்டி, தர்காக்களை உண்டாக்கி அங்கே பூஜை புணஸ்காரம் செய்யும் மக்கள்தானே தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாற்று மதங்களிலுள்ள ஜாதிப் பிரிவினைகள் போல் இஸ்லாத்திலும் மத்ஹபுகளின் பெயரால் பிரிவினைகளை உண்டாக்கிக் கொண்டு பெருமை பேசுபவர்கள் தானே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இறைவனின் உண்மைத் தூதர்-இறுதித்தூதர் தன்னோடு இருந்தவர்களையெல்லாம் தனது தோழர்கள் என அழகாக அழைத்து நடைமுறைப்படுத்திக் காட்டித் தந்திருக்க அதற்கு மாற்றமாக பீர்-முரீது என்று மற்ற மதத்தினரைக் காப்பியடித்து, குரு சிஷ்ய நடைமுறையை நடைமுறைப்படுத்தும் தரீக்கா வாதிகள்தானே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். இன்று முஸ்லிம் சமுதாயத்தின் மிகப்பெரும்பான்மையினர் இப்படிப்பட்ட மனித அபிப்பிராயங்களால் உண்டாக்கப்பட்ட மதங்களைக் கடைபிடித்துக் கொண்டு தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லி வருவதால், நாஸ்திகர்கள் இவர்களின் இந்த சொற் செயலை வைத்துத்தான் இஸ்லாத்தையம் கணிக்கின்றனர். மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் செய்யத் தூண்டும் மக்களை மடைமையில் மூழ்கச் செய்யும் மதங்களைப் போல் இஸ்லாமும் ஒரு மதமே என்று தவறாகக் கணக்குப் போடுகின்றனர். நாஸ்திகர்களின் மதிப்பீடுகள் எல்லாம் இந்த அடிப்படையில் அமைந்தவையே.

35- நாஸ்திகர்களின் குறையல்ல:
இதற்கு நாம் நாஸ்திகர்களைக்குறை சொல்ல மாட்டோம். அப்படி அவர்கள் தவறாக இஸ்லாத்தை எண்ணும் வகையில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணாக நடக்கும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம்களையே குறை சொல்லுகிறோம். முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தைத் தவறாக விளங்கி கொள்ள இவர்களே காரணகர்தாவாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். மிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் இவ்வாறு நடப்பதால் இஸ்லாம் அவற்றையே போதிக்கிறது என்று அவர்கள் எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆயினும் நாஸ்திக நண்பர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது, தயவு செய்து இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை எடை போடாதீர்கள். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் இறுதித்தூதர் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்த மக்களிடம் போதனை செய்து அவர்களை அகில உலக மக்களின் வழிகாட்டிகளாக ஆக்கினார்களே அந்தச் சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள் என்று செல்லுகிறோம். இறைகொடுத்த இறுதிமறைக் கட்டளைகள் மனித அபிப்பிராயங்கள் கலக்காமல் அவை தூய்மையான நிலையில் கடைபிடிக்கப்பட்ட போது அவை உலக மக்களிடம் ஏற்படுத்திய அதிசயிக்கத்தக்க உன்னத மாறுதல்களை மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள் என்று சொல்லுகிறோம். உலகலாவிய மக்கள் இப்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் உலகின் பிரச்சினைகள் தீர்ந்து சுபிட்சமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று நாஸ்திகர்கள் கற்பனையாகச் சொல்லுவதுபோல், நாமும் இனிமேல் நடக்கப்போவதை கற்பனை செய்து பார்க்கச் சொல்லவில்லை. நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்ட உண்மைச் சரித்திரத்தைப் பார்க்கச் சொல்லுகிறோம். ஆனால் வருந்தத்தக்க விஷயம் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டட மறைவழி எப்படி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு அவர்கள் வழி தவறிச் சென்றார்களோ அதேபோல் இறுதித் தூதருக்குக் கொடுக்கப்பட்ட இறுதி மறை போதிக்கும் வழி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு இவர்களும் வழி தவறிச் சென்றிருக்கிறார்கள். எனவே இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலையை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லுகிறோம். முஸ்லிம்கள் செய்யும் தவறுகள் இஸ்லாத்தின் தவறுகளல்ல என்பதை நாஸ்திக நண்பர்கள் உணர வேண்டுகிறோம். அந்த இறைவழியை எடுத்துச் சொல்லும் அல்குர்ஆன் மனிதக் கரங்களால் மாசுப்படுத்தப்படாமல் பாதுகாப்பான நிலையில் உள்ளது அதனை முறைப்படி விளங்க முற்படுங்கள் என்றே நாஸ்திக நண்பர்களுக்குச் சொல்லுகிறோம்.

36- ஆத்திரமோ, அனுதாபமோ வேண்டாம்!
அந்த குர்ஆனையும் நாங்கள் அணுகிப் பார்த்து விட்டோம், அதிலும் பல குறைகளைக் கண்டு பிடித்து விட்டோம். எங்களது தோழர்கள் அவற்றைத் தெளிவுபடுத்தி பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றனர் என்று அவர்கள் சொல்லலாம் நாம் அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவது இதுதான் மனித இயல்பின்படி குற்றங்காணும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் சரியானவையும் தவறாகவே தெரியும். அதேபோல் நியாயப்படுத்தும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் தவறானவையும் சரியாகவே தெரியும். எனவே ஆத்திரமோ, அனுதாமோ இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனை ஆராய முன் வாருங்கள். ஆல்குர்ஆனைக் கொண்டு இறைவனின் இறுதித்தூதர் 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்திக் காட்டிய வாழ்க்கை நெறியை ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் கற்பனை செய்துள்ளதை விட உயரிய மேலான சுபீட்சமான ஒரு வாழ்க்கைத்திட்டம் மனிதர்களுக்காக இருப்பதை அறிந்து கொள்வீர்கள். மற்ற மதங்களைப்போல் இஸ்லாமும் ஒரு மதமே என்ற உங்களின் தவறான எண்ணம் மாறி இஸ்லாம் ஒரு மதமல்ல, அது இறைவனால் மனித வர்கத்திற்குக் கொடுக்கபட்டுள்ள வாழ்க்கை நெறி, அதைவிட சிறந்த வாழ்க்கை நெறியை உலகில் தோன்றிய எந்த மனிதனும் தர முடியாது. எந்த இஸமும் தர முடியாது என்ற மறுக்க முடியாத மாபெரும் உண்மையை நீங்களும் விளங்கிக் கொள்வீர்கள்.

அந்த இறை கொடுத்த மறை வழி மனிதன் இவ்வுலகிலும் அவன் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் முறையாகவும், நிறைவாகவும் அனுபவிக்க வழி வகுத்துத் தந்திருக்கிறது. அது துறவு வாழ்க்கையை கற்பிக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்வீர்கள். இறை வழங்கிய மறைவழி விட்டு மனிதன் தனது சுயவழி தேடிக்கொண்டதின் விளைவே இவ்வுலக வாழ்க்கையை முறையாக அனுபவிக்க முடியாமல் போகிறது என்பதையும் துறவு வாழ்க்கை கொண்டே மனிதன் முக்தி பெற முடியும் என்பது தவறான ஐதீகம் என்பதை எல்லாம் விளங்கிக் கொள்வீர்கள்.

அது இறை நம்பிக்கை உடையவர்களே நாஸ்திகர்களைவிட இவ்வுலக வாழ்க்கையின் மனமகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை ஆதாரங்களுடன் பார்ப்போம்.

நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்பதையும் நாஸ்திகர்கள் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
08/16/2011 23:49:59
mohamed
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one